நந்தனார் சரித்திரம் - Part 3
நந்தனாருக்கு புத்தி சொல்ல சேரி மக்கள் எல்லோரும் கூடி பெரிய கிழவனை அனுப்பிகின்றனர். பெரிய கிழவனார் நந்தனாரிடம், நீ செய்வது நியாயம் தானோ, நம் சேரிக்கும், நம்ம சாதிக்கும் இது அடுக்குமோ. நடராஜ தரிசனம், சிதம்பர பயணம், இதெல்லாம் நம்ம ஜாதிக்கு தகுமோ. நமக்கு தெய்வம் எது? கழனியல்லவோ? கழனியே தெய்வமென்று சுற்றி வந்து, தலைவணங்கி, கரம் குவித்து, விதை தெளித்து, முலைகொள்ள நீரோட விட்டு, விளைத்து, நம் குலதெய்வமான காத்தவராயனுக்கு பொங்கலிட்டு, படையல் போட்டு, விளைந்த தானியங்களை அறுவடை செய்வது தானே நம் வேலை. அதையெல்லாம் விடுத்து, சிதம்பரம் செல்ல வேண்டும், நடராசரை தரிசிக்க வேண்டும் என்று சொல்வது நியாயம் தானோ? சொல்!. நீ மட்டும் கெட்டு போகாமல், துணைக்கு சேரி மக்களையும் சிதம்பரம் போகலாம், நடராஜரை தரிசிக்கலாம், முக்தி பெறலாம் என்று கெடுக்கிறாய். சுவாமி தரிசனம் நமக்குண்டோ? நம்ம ஜாதி என்னவென்று உமக்கு தெரியுமோ? பூமி தரிசனம் போதும் நமக்கு, சோறு போடும் பூமி தரிசனம் போதும் நமக்கு, அதுவே பெரும் புண்ணியம். நம் தொழில் என்ன? நாற்று நரம்புகளை (நந்தனாரின் குல தொழிலான, இசை கருவிகளுக்கு தேவையான நாற்று நரம்புகளை பதப்படுத்துவது) செய்வது, பயிர்களை விதைத்து, உழுது, அறுவடை செய்வது, நிலக்கிழாரிடம் பணிவிடை செய்வது, அதை விடுத்தது சிவா தரிசனம் நமக்கு தேவையா? வாழ்க்கைக்கு என்பது என்ன? நர் பெண்டிரை மணந்து, நர் சந்ததியரை வளர்த்து வாழ்வது தானே வாழ்க்கை, அதை விடுத்து சிதம்பரமே கதி என்று இருந்தால் சோற்றுக்கு என்ன செய்வாய்? என்று பலவாறு புத்திமதிகளை நந்தனாருக்கு பெரிய கிழவனார் கூறுகிறார்.
நந்தனார் பெரிய கிழவனாரிடம், சிதம்பர தரிசனம் காணாத இந்த ஜென்மத்துக்கு பலனுண்டோ? ஜெனன மரண சம்சாரம் பெருகுமே தவிர, செய்த வினைகள் போகுமோ? இப்படியே எப்போதும் இருப்போம் என்று நினைக்கலாகுமோ? நாம் மனமறிந்து செய்திடும் பாபங்கள் நம்மை விட்டு போகுமோ? ஏதும் அறியாத மூடர்களின் பேச்சை கேட்கலாகுமோ? பரமசிவனை கொண்டாட வேண்டுமென்று பாவி நான் பார்த்தேன், ஆனால் நம்முடைய வினைப்பயன் அவரை காண வழிபன்னாமல், திரையிடுகிறது, நான் என்ன செய்வேன்? கிழவா மீசை நரைத்து போச்சே தவிர உமக்கு ஆசை போகவில்லை கிழவா, பாசம் கொண்டுருக்கிறாய் தவிர பாபம் தொலைக்கவில்லை கிழவா, உடல் கூனி குறுகி போச்சு தவிர கோபம் தொலைக்கவில்லை கிழவா, உன் அங்கம் தளர்ந்து போச்சு தவிர உமக்கும் “நான்" என்கிற அகங்காரம் போகவில்லை கிழவா, சேரியையே நினைத்தாய் தவிர சிதம்பரத்தை மறந்தாய் கிழவா, மானிட ஜென்மமடா கிழவா, மாண்டால் வருமோ? வாழும் பொழுதே அவன் தாழ் வணங்கினால் ஜெனன மரண கடலை கடந்து முக்தி பெறலாம். ஆசை, பாசம், கோபம், அகங்காரம் விட்டு அவனை சரணடைந்து வீடுபேறு பெறலாம்.
