குதம்பை சித்தரும் வாசி யோகமும்
ஒருவருக்கு யோக நிஷ்டையில் இப்பிறவியில் நாட்டமுண்டு எனில், அவர் முப்பிறவியிலும் இந்த யோக நிஷ்ட்டையில் ஒரு நிலையை அடைந்திருப்பார். எதுவரை அந்த யோக நிஷ்ட்டையில் அவர் பயிற்சி பெற்று இந்த உலகத்தில் இருந்து முற்பிறவியில் விடை பெற்றிருந்தாரோ அந்த நிலையிலிருந்து அவர் அடுத்த பிறவியில் அவர் தொடர்வார்.
இது குதம்பை சித்தர் வாழ்விலும் நடந்தது. குதம்பை சித்தர் தமிழ்நாட்டில் மயிலாடுதுறையில் இடையர் குளத்தில் பிறந்தார். இவர் பெற்றோருக்கு இவர் ஒரே பிள்ளை. பெண் பிள்ளை இல்லாத காரணத்தினால் இவர் தாய் இவருக்கு குதம்பை என்னும் ஒரு வகை காதணியை இவருக்கு அணிந்து இன்புற்றார். இந்த குதம்பை என்னும் காதணி பெரும்பாலும் பெண் பிள்ளைகள் தான் அணிவார்கள். அதனால் தான் இவருடைய பெயர் குதம்பை என்றானது.
ஒருநாள் குதம்பையார் தன வீட்டில் இருக்கும் போது ஒரு சித்தர் இவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது யாரோ ஒருவர் தம் வீட்டில் வெளியில் நிற்பதை கண்டு குதம்பையார் வீட்டிற்கு வெளியே சென்றார். அப்போது இவருக்கு பதினாறு வயது. அந்த சித்தர் குதம்பையாரை பார்த்து குழந்தாய்! நீ சாதாரண மனிதன் அல்ல. முற்பிறவியில் நீ கானகத்திற்கு சென்று கடும் தவம் இயற்றினாய். பல வருடங்கள் நீ தியான நிலையில் ஒரு மரத்தடியில் அமர்ந்து இருந்தாய். அந்த காட்டில் ஒரு பெரிய புயல் அடித்தது. நீ ஆழ்ந்த தியானத்தில் இருந்ததால் அந்த புயல் பற்றிய சலனமே உன்னிடம் இல்லை. நீ அமர்ந்து இருந்த இடத்தில இருந்த மரக்கிளை புயலினால் உடைந்து உன் மேல் விழுந்தது. நீ முற்பிறவியில் இவ்வாறு உயிர் நீத்தாய் என்று கூறினார். மேலும் உன் தாய் உனக்கு திருமணத்திற்காக பெண் பார்த்து கொண்டிருக்கிறார். ஆனால் அது நடக்காது. வந்தவரை வணங்கி நின்ற குதம்பையாருக்கு குரு அருளுபதேசம் செய்தார்.
ஒரு நாள் இரவு குதம்பையார் யாருக்கும் தெரியாமல் எழுந்து ஒரு காட்டிற்குள் புகுந்தார். நேரே சென்ற அவர் கால்கள் ஒரு மரத்தின் முன் நின்றது. அது அவர் முற்பிறவியில் தவம் செய்து, உயிர் நீத்த அதே இடம். அந்த மரத்தில் ஒரு பொந்து இருந்தது. அதனுள் நுழைந்து தவநிலையில் ஆழ்ந்தார். அவர் தவத்தில் இருக்கும் போது ஒரு அசரீரி கேட்டது. குதம்பாய்! நான் உனக்கு வருண மந்திரம் சொல்லி தர போகிறேன். அந்த மந்திரத்தை நீ இந்த காட்டில் உச்சாடனம் செய். நீ அந்த மந்திரத்தை யானைகள் கேட்கும் வண்ணம் உச்சாடனம் செய், ஏனென்றால் யானைகளுக்கு மந்திரங்களை ஈர்க்கும் ஆற்றல் உண்டு. அவற்றின் பிளிறல் ஓசையில் அந்த மந்திரங்கள் ஒலிக்கும். அப்பொழுது பூமியில் வருண பகவான் மழையாக பொழிவார். உலகம் செழிக்கும். குதம்பையாரும் வருண மந்திரத்தை உச்சாடனம் செய்தார். மழை பொழிந்து காடு செழித்தது.
யார் வாசியோகம் என்ற கலையை பயின்று, ஆழ்ந்த நிலையில் இறைவனை வணங்குகிறாரோ அவர்களெல்லாம் குதம்பை சித்தரை மானசீக குருவாய் ஏற்று வணங்கினால், இன்றும் மழை பெய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கீழே மயிலாடுதுறையில் அமைந்து இருக்கும் மயூரநாத சுவாமி கோயிலில் உள்ள குதம்பை சித்தர் சந்நிதியான ஜீவ சமாதி படம் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக