திங்கள், 30 ஆகஸ்ட், 2021

குருவாயூரப்பன் கோயிலின் ஸ்ரீகிருஷ்ணர் மகிமை



 

இன்று கிருஷ்ண ஜெயந்தி, இந்நன்னாளில் குருவாயரப்பர் கிருஷ்ண கோயில் பற்றிய வரலாற்றினை காண்போம்.

பரீக்ஷித்து மன்னனின் மகனான ஜனமேஜய மன்னர் தன தந்தையின் மரணத்திற்கு காரணமான தக்ஷன் என்ற பாம்பின் மீது கோபம்கொண்டு பழிவாங்கும் நோக்கில் உலகிலுள்ள பாம்புகளை எல்லாம் பிடித்து வர செய்து, சர்ப்ப யாகம் செய்து எத்தனையோ ஆயிரக்கணக்கான பாம்புகளை கொன்றான். அந்த பாவத்தின் காரணமாக ஜனமேஜய மன்னனுக்கு குஷ்டநோய் (Leprosy) ஏற்பட்டது. மருந்து மூலமாக அவனுக்கு எந்த வித நிவாரணமும் ஏற்படவில்லை. தன் இன்உயிரை மாய்த்து கொள்ள முடிவு செய்தான். அப்பொழுது தத்தாத்ரேய முனிவர் அவர் முன் தோன்றி அவன் தொழுநோய் தீர்வதற்கான உபாயத்தை கூறினார். அது என்ன வென்றால் குருவாயூர் திருக்கோயிலில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை பூஜித்து வந்தால் இந்த கொடிய நோயினிலிருந்து விடுபடலாம் என்பதாகும்.

மேலும் அவர் மன்னனுக்கு, குருவாயூரிலுள்ள சிலை வடிவ விக்கிரகம் நாராயணனின் ரூபம் தான் எனவும், அவரே அந்த விக்கிரகத்தை பூஜித்து வந்ததாகவும் தத்தாத்ரேயர் கூறினார். பத்மகல்பத்தின் ஆரம்பத்தில் அந்த விக்கிரஹத்தை ஸ்ரீமந்நாராயணனே ப்ரஹ்ம்மாவிடம் கொடுத்ததாகவும், அந்த திவ்ய விக்கிரஹத்தின் அருளினால்தான் ப்ரஹ்ம்மாவால் படைப்பு தொழிலை செய்ய முடிந்தது என்றும்  கூறினார். வராஹ கல்பத்தின் ஆரம்பத்தில் சுதாபா பிருஸ்னி என்பவர்கள், பிள்ளை வரம் வேண்டி ப்ரஹ்மமாவை வேண்டினர். பிரம்மன் அந்த விக்கிரஹத்தை அவர்களிடம் கொடுத்து நீங்கள் இந்த விக்கிரஹத்தை பூஜித்து வந்தால் உங்களுடைய எண்ணம் நிறைவேறும் என்று கூறினார். அவர்களுடைய பக்தியினாலும், தூய அன்பினாலும் பகவான் மகாவிஷ்ணுவே அவர்கள் முன் தோன்றினார். அப்பொழுது அவர்கள் புத்திர பேரு கிடைக்க வரம் அருள வேண்டும் என்று வேண்டினார்கள். பகவானும் அப்படியே நிறைவேறும் என்றார். அவர்களுக்கு மூன்று பிறவி  வரை தானே மகனாக பிறப்பதாகவும் வாக்களித்தார்.  அந்த மூன்று பிறவிகளிலும் தமது தெய்வீக விகிரஹத்தை அவர்கள் இருவரும் பூஜித்து வரலாம் என்று கூறினார். அதன்படி பிருஸ்னிக்கு ஒரு மகன் பிறந்தான், அவருக்கு 'பிருச்னி கர்ப்பன்' என்ற பெயர் சூட்டினார்கள். இரண்டாவது பிறவியில் வாமன  அவதாரம் எடுப்பதற்கு காஸ்யப முனிவருக்கும் அதிதி அவர்களுக்கும் மகனாக பிறந்தார். மூன்றாவது பிறவியில் வசுதேவருக்கும் தேவகிக்கும் கிருஷ்ணனாக அவதாரம் எடுத்தார். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவருடைய அவதார நோக்கம் எல்லாம் பூர்த்தி அடைந்த பின் உத்தவ முனிவனிடத்தில் தான் வைகுண்டம் சென்ற பின் இந்த விக்கிரகத்தை மீட்டு தேவகுருவான பிரகஸ்பதியின் ஆலோசனைக்கேற்ப, அவர் தேர்ந்தடுக்கும் இடத்தில இந்த விகிரஹத்தை பிரதிஷ்டை செய் என்று கூறினார். மேலும் கலியுகத்தில் இந்த விகிரஹத்தை தொழுது வணங்கி, வழிபட்டு, பூசித்து வந்தால் நான் எனது ஆசிகளையும், வரங்களையும் பக்தர்களுக்கு வழங்குவேன் என்றும் கூறினார்.

கடல் நீர் கொந்தளித்து பெருவெள்ளமாக பாய்ந்து துவாரகை நகரத்தை மூழ்கடித்தது. அந்த பெருவெள்ளத்தில் அலைகளிடையே ஸ்ரீ கிருஷ்ண பகவான் பூஜித்த அந்த விக்கிரகம் மிதந்து வருவதை தேவ குருவான பிருஹஸ்பதியும், வாயு பகவானும் கண்டனர். வாயு பகவான் அந்த விகிரஹத்தை தமது தலைமீது சுமந்து கொண்டு, பிருகஸ்பதியின் அலோசனையை ஏற்று விக்கிரகத்தை ஸ்தாபித்தற்கு உரிய இடத்தை தேடி அலைந்தனர். அதே சமயத்தில் பரசுராமரும் அந்த திவ்ய விக்கிரஹத்தை  தேடி அலைந்து கொண்டிருந்தார்.

பரசுராமர், ஜமதக்கினி என்ற முனிவரின் மகன். ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாராயினும் அவர்கள் அனைவரையும் வெட்டி கொன்று, அந்த ரத்தத்தில் இறந்துபோன தன் தந்தையின் திலதர்ப்பணத்தை செய்வதாக அவர் சபதம் செய்திருந்தார். அந்த ரத்த தர்ப்பணத்தை செய்ய அந்தணர்கள் யாருமே முன் வராததால், அப்படி வருபவர்களுக்கு அவர்கள் வாழ்வதற்கு உரிய நிலத்தை அளிப்பதாக கூறினார். தன் பரசு என்னும் ஆயுதத்தை வீசி, அது எங்கு விழுகிறதோ அந்த இடத்தை எல்லாம் தானமாக அந்தணர்களுக்கு வழங்கினார். அதுவே பிற்காலத்தில் கேரள ராஜ்யமானது. அந்த காலத்தில் கேரளா தேசம் எங்கும் கீல்வாத பிடிப்பு (REHUMATOID ARTHRITIS) நோய் பரவி மக்கள் அவதிப்பட்டு கொண்டிருந்தார்கள். பரசுராமர் அந்த நோய் தீர்வதற்கான மார்கத்தை நாரத முனிவரிடம் கேட்டறிந்தார். நாரத முனிவர், பரசுராமரிடம் துவாரகையில் உள்ள ஸ்ரீகிருஷ்ண விக்கிரஹத்தை இங்கு கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து தொழுது வந்தால் இந்த நோயிலிருந்து மக்கள் விடுபடுவர் என்று கூறினார்.  அதன்படி பரசுராமர், கிருஷ்ண விக்கிரஹத்தை எடுத்து வந்த பிரகஸ்பதியையும், வாயுவையும் அழைத்து தன் கேரள ராஜ்யத்தில் கோவிலை நிர்மாணித்தார். குருவும் வாயுவும் சேர்ந்து கோயிலை கட்டியதால் அவ்வூருக்கு குருவாயூர் என்றும், ஸ்ரீ கிருஷ்ண விக்கிரஹத்திற்கு 'குருவாயூரப்பன்' என்ற பெயரும் வழங்கலாயிற்று. 

இத்தகைய குருவாயூர் பற்றிய கதைகள் முழுவதையும் கேட்டறிந்த ஜனமேஜய மன்னன் குருவாயூர் சென்று பக்தியுடன் அங்கேயே தங்கி குருவாயூரப்பனை மனமுறுகி தியானித்தான். ஒருநாள் இரவு ஜனமேஜய மன்னன் உறங்கி கொண்டிருக்கும் போது, அவர் கனவில் குருவாயூரப்பன் தன தலையிலிருந்து பாதம் வரை தடவி கொடுப்பது போல் கனவு கண்டான். அவன் கண்களை விழித்து பார்த்த பொழுது அவன் உடலை பீடித்திருந்த தொழு நோய் மறைந்து பரிப்பூர்ண ஆரோக்கியத்தை பெற்றதை உணர்ந்து குருவாயூரப்பன் மீது பக்தி பரவசமடைந்தான். 

 

 

 

 

  

  PIXXEL: CAPTURING EARTH'S ESSENCE FROM THE SKY In today's world most of the mobile buyers used to buy mobile phones with best pixe...