வெள்ளி, 22 ஜனவரி, 2016

Thiruvannamalai girivalam benefits in tamil



 திருவண்ணாமலை கிரிவலத்தின் சிறப்புகள்/ மகிமைகள்

சிவாய நம

திருவண்ணாமலை இடைக்காடர் சித்தர் வாழ்கின்ற தலம். ரமண மகரிஷி, வேதாந்த சேசாத்திரி, விசிறி சாமியார் இப்படி எண்ணற்ற சித்தர்கள், ஞானிகள், முனிவர்கள் அருள்பெற்ற தலம். அருணகிரிநாதர் அருள்பெற்ற தலம். இப்படி பல அற்புதமான சக்திகளைக் கொண்ட திருவண்ணாமலைக்கு பௌர்ணமி திதியில் சென்று வந்தால் மகத்தான பலனை அடையலாம்.

கிரிவலம் வருவதால் என்னன்ன பயன்கள் உண்டாகிறது என்பதை அருனச்சலபுராணம் கூறுவதை பார்ப்போம்.

சோணகிரி வலம்புரிதல் பிரவிஎனும் 
             பெருங்கடற்குத் தோணி ஆகும் 

ஏழ்நகரக்  குழிபுகுதாது அறியமுத்தி 
            வழிக்குஏற ஏணி ஆகும்

கான்அறிய தவத்தினுக்கும் அறத்தினுக்கும் 
            அரும்பொருட்கும் காணி ஆகும் 

வாள்நுதல்மின் இடத்து இருக்கும் கண்ணுதலை 
             மனம் உருக்கும் மகிழ்ச்சி ஆகும் 

திருஅருணாச்சலத்தை வலம் செய்வது பிறப்பு என்னும் பெரிய கடலை தாண்டுவதற்கு ஒரு தோணியாகும். நரகம் செல்லாமல் தடுத்து முக்தி பெறலாம். தவம் தர்மம் செய்த பலனைப் பெறலாம். பெரிய செல்வத்தை பெறுவதற்கு இந்த கிரிவலம் ஒரு காணியாகக் இருக்கும். பராசக்தியை இடதுபக்கம் வைத்திருக்கும் பரமசிவனை மனமுருகி வேண்டினால் எல்லா அருளும் ஞானமும் கிடைக்கும்.


இனி ஒவ்வொரு நாளும், அதாவது ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி போன்ற நாட்களில் கிரிவலம் வந்தால் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை அருநாச்சலபுராணம் கூறுவதை பார்ப்போம்.


வரம்தரும் அருக்க வரம் 
                                               மலைவலம் புரிந்தோர், வெய்யோன் 

தெரிந்தமண் டலத்தை கீறிச் 
                       சிவகதி பதியாய்ச் சேர்வார்;

திரம்தரும் சோம வாரம் 
                           திருமலை வலமாய் வந்தோர்,

புரந்தரன் எனஏழ் பாரும் 
                              புரந்தஅரண் தன்மை பூண்பார்.

ஞாயிறு கிரிவலம் வருவது நினைத்த காரியங்கள் நடக்கும். பல வரங்கள் கிடைக்கும். சூரிய மண்டலத்தை பிளந்து சிவபதத்தை அடையலாம். சிவஞானத்தைப்  பெறலாம். திங்கள்கிழமையில் வலம் வந்தவர்கள் ஏழு உலகத்தையும் ஆளுகின்ற சக்தியை பெறுவார்கள். இந்திரனை போல் சகல பாக்கியங்களுடன் வாழும் அற்புதமான வாழ்க்கை உண்டாகும்.

மங்கல தினத்தில் சூழ்வோர் 
          கடனுடன், வறுமை நீங்கிச் 

சங்கிலித் தொடராம் ஏழு 
                           பிறப்பையும் தவிர்ப்பார்; புந்திக்கு 

எங்கள்நா யகரைச் சூழ்வோர்,
                 இருங்கலை மறைகள் நாலாறு 

அங்கமும் தெளிந்து முக்திக்கு 
  அருகராய் அமரர் ஆவார். 

செவ்வாய்கிழமை கிரிவலம் வந்தால் கடன்கள் நீங்கும். வறுமை இல்லாமல் போகும். எதிர்ப்புகள் விலகும். சங்கிலித்  தொடர்போல் வருகின்ற ஏழுபிறப்பையும் நீக்கலாம். முக்தி அடையலாம். வெற்றி உண்டாகும். புதன் கிழமை கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வணங்கினால் நான்கு வேதங்களும் நாவில் குடி கொள்ளும். ஆறு சாஸ்திரங்களும், அறுபத்தி நான்கு கலைகளும் கைகூடப்  பெறுவார்கள். தேவர்களை போல் வாழ்வார்கள்.


மா  வியாழத்தில் செய்ய 
                                 மணிவரை வலமாய் சூழ்வோர் 

மூவரும் புகழத் தேவர் 
                         முனிவர்தம் குரவர் ஆவார்,

தாவிலா வெள்ளி வாரம் 
                                  தனில்வலம் புரிந்தோர், கஞ்சப் 

பூவையைப் புணரும் பூவைப் 
                                                           புணரும்மால் புரத்தில் சேர்வார் 

வியாழகிழமைகளில் சிவப்பு மலையாகிய அருணாச்சலத்தை வலம் வந்தால், மும்மூர்த்திகளின் அருள் கிடைக்கும். மும்மூர்த்திகளும் புகழும்படியான வாழ்க்கை கிடைக்கும். முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் ஆசிரியராக திகழும் நிலை உண்டாகும். வெள்ளிகிழமை கிரிவலம் வந்து ஈசனை வேண்டினால் வற்றாத செல்வம் உண்டாகும். பொன்  சேரும். தாமரை மலரின் மேல் இருக்கும் லக்ஷ்மியின் அருள் கிடைக்கும். விஷ்ணுவின் பூரண அனுக்ரகத்தை பெறலாம்.

உதயமே சனிநாள் சூழ்வோர்க்கு,
               ஒன்பது கிரகம் நன்றாய்ப் 

பதினோராம் இடத்தில் தூய 
                       பலன்களைப் பலியா நிற்கும்;

மதிஅணி சிவன் இராவும்,
                                 வருடம் வந்து உதிக்கும் நாளும்,

அதிகமாம் அதிகம் ஆகும்,
                     ஐப்பசி முதலாம் மூன்றும்,

சனிக்கிழமை அதிகாலை திருவண்ணாமலையை வலம்வந்து சிவபெருமானை வணங்கினால் நவகிரகங்களின் தோஷம் விலகும். ஒன்பது கிரகங்களும் ஜாதகத்தில் லாபஸ்தானமான பதினொன்றாம் இடத்தில இருந்தால் என்ன நற்பலன்களை அடைய முடியுமோ, அத்தனை அற்புதமான பலன்களை அடையலாம். பிறைசூடிய அந்த எம்பெருமானை சிவராத்திரியில் வலம் வருவதும், ஐப்பசி, கார்த்திகை, மார்கழி இந்த மூன்று மாதமும் தொடர்ந்து கிரிவலம் செய்வோர்க்கு நவகிரகங்களும் சுபகிரகங்களாக மாறி  நன்மைகளை வாரி வழங்கும். ஒவ்வொருவருக்கும் லக்னத்திர்க்கு பதினோராம் இடமான லாப ஸ்தானம் சிறப்படையும். 

சிவாய நம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நந்தனார் சரித்திரம்- Part 2

  நந்தனார் சரித்திரம்-  Part 2 நந்தனார் திருப்புங்கூர் சிவலோகநாதனைத் தரிசனம் செய்து  ஆதனூர் வந்த நாள் முதலாய் உணவு உண்ணாமல், உறக்கம் கொள்ளாம...

Thiruvannamalai Girivalam benefits