வேங்கடராமன் என்னும் மனிதம் எவ்வாறு ரமண மஹரிஷி என்று ஆனது.
திருவண்ணாமலை என்றால் எப்படி திருவண்ணாமலை ஈஸ்வரர் எல்லாருக்கும் தெரியுமோ அதே போல் ரமண மஹரிஷி பற்றி அறியாதவரும் இளர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகில் உள்ள திருச்சுழி என்னும் கிராமத்தில் சுந்தரம் அழகம்மாள் என்னும் தம்பதிக்கு 1879-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 30-ம் தேதி மகனாக ரமண மஹரிஷி அவதரித்தார். பெற்றோர்கள் அவர்களுடைய குல தெய்வ பெயரான வேங்கடராமன் என்னும் பெயரை அவருக்கு வைத்தனர்.
ரமண மகரிஷியின் பிறப்பை பற்றி பாலகுமாரன் அவர்கள் எழுதிய ஶ்ரீ ரமண மஹரிஷி என்னும் புத்தகத்தில் அழகாக கூறுவார், அதாவது "உலகில் பிரளயம் ஏற்பட்டபோது, சிவன் சூலத்தால் ஒரு பள்ளம் ஏற்படுத்த, பிரளயம் சுழித்துக்கொண்டு அந்தப் பள்ளத்தில் மறைந்தது. பிரளயம் சுழித்து மறைந்ததால், அது திருச்சுழி. வெகு காலத்துக்குப் பிறகு, அதே சுழியில் இருந்து பிரளயம் ஒன்று வெளிப்பட்டது. அது அன்புப் பிரளயம். ரமணானுபவம். அது பொங்கி எழுந்து உலகையெல்லாம் நனைத்தது".
அதை நிரூபிக்கும் வண்ணம் அவருடைய ஜாதகமும் இருந்தது. துலாம் லக்னம், இரண்டாம் இடத்தில் புதன் சுக்ரணுடன். ஐந்தாம் இடத்தில் குரு, சனியின் கும்ப வீட்டில். ஆறாம் வீட்டில் சனி, குருவின் வீட்டான மீனத்தில். சனியும் குருவும் பரிவர்த்தனை யோகத்தில். பொதுவாக குருவும் சனியும் தொடர்பு கொண்டிருப்பின் அவர்கள் ஆன்மீக நாட்டம் அதிகம் உள்ளவர்களாக இருப்பர். அது போலவே சிறு வயதிலேயே வேங்கடராமன் ஆன்மீகத்தில் ஈடுபாடு உடயவராக இருந்தார்.
ஆனால், சுந்தரமய்யர் வீட்டுக்கு ஒரு சாபம் இருந்தது. உண்ண உணவும், படுக்க இடமும் கேட்ட ஒரு துறவியைப் பல தலைமுறைகளுக்கு முன்னால் விரட்டி அடித்ததால், அந்த வம்சத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும் யாரோ ஒருவர் துறவியாகப் போவார் என்ற விதி இருந்தது. அதுபற்றி அப்போது யாரும் கவலைப்படவில்லை.
சிறு வயதில் வேங்கடராமன் விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். கால்பந்து, கபடி, நீச்சல் போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார்.
ஶ்ரீ ரமண மஹரிஷி பற்றிய சில சுவாரசியமான சம்பவங்களை விவரித்த பாலகுமாரன் எழுதிய ஶ்ரீ ரமண மஹரிஷி என்னும் புத்தகத்தில் இருந்து சிலவற்றை பார்ப்போம்.
சிறு வயதில் வேங்கடராமனுக்கு தூக்கம் அதிகமாக வரும். ‘கும்பகர்ணா’, ‘தூங்குமூஞ்சி’ என்று அந்தச் சிறுவனைக் கடிந்து கொண்டார்கள். தூக்கம் வீட்டில் மட்டுமல்ல; வகுப்பறையிலும் வந்தது. தூங்கினால் காது திருகி, தலையில் குட்டி, ஆசிரியர் எழுப்புவார், அவமானப்படுத்துவார் என்பதால், குடுமியின் நுனியில் நூல் முடித்து, அந்த நூலை எடுத்து சுவரிலுள்ள ஆணியில் மாட்டிவிட்டு வேங்கடராமன் படித்துக்கொண்டிருப்பான். தூங்கி வழிந்தால், சட்டென்று குடுமி இழுபடும். விழித்துக்கொள்வான். எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் தூங்க முடியும் என்கிற வரப்பிரசாதம் இளம் வயதில் அவனுக்கு இருந்தது.
பெரியபுராணத்தின் தாக்கம், அப்பாவின் மரணம், தான் எதற்கும் லாயக்கற்றவனோ என்ற அச்சம்... ஆகியவற்றால், தான் யார் என்ற வினா, பதினாறு வயது இளைஞனுக்குத் தோன்றியது. வேங்கடராமன் மரணம் பற்றி யோசித்தான். உயிருள்ளபோதே மரணத்தை அனுபவித்தான். எதை அறிந்தால் அறிவோ, அதை அறிந்தான்; எதை அடைந்தால் உயர்வோ, அந்த உயர்வை எட்டினான். இந்த மரண அனுபவத்துக்குப் பிறகு, என்ன செய்வது என்று வேங்கடராமனுக்குத் தெரியவில்லை. இந்த வாழ்க்கை கடும் குப்பை. சரி, இதை விட்டு எங்கே போவது? உள்ளே கேள்வி எழுந்தது. ‘அண்ணாமலை’ என்ற பெயர் தோன்றியது. இதற்கு முன் வீட்டுக்கு வந்தவரிடம் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்க, ‘அண்ணாமலை’ என்று அவர் சொல்ல, உடம்பில் ஒரு பரவசம் தோன்றியதே, அது மறுபடியும் நினைவுக்கு வந்தது. அண்ணாமலைக்குப் போகவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அது எழுந்தபோதே ஆனந்தம் பொங்கியது. யாரோ மிகத் தெரிந்தவர் அங்கு இருக்கிறார்; அவரைப் பார்க்கவேயில்லை; இப்போது போய்ப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் கிளர்ந்தது. ஆனால், எப்படிப் போவது. காசு வேண்டுமே. முதலில், திருவண்ணாமலை எங்கிருக்கிறது என்று தெரியவேண்டும். மதுரையிலிருந்து திருவண்ணாமலைக்கு ரயில் மார்க்கத்தைத் தேடினான் வேங்கடராமன். அது பழைய ரயில் வரைபடம். திருவண்ணாமலைக்குப் போவதற்கு ரயில் இருப்பது தெரிந்தது. திண்டிவனம்தான் திருவண்ணாமலைக்கு அருகே இருக்கிற ஊர் என்று வேங்கடராமன் நினைத்துக்கொண்டு, திருவண்ணாமலைக்குப் போக எத்தனை காசு என்று கணக்கிடும்போது, ‘மூன்று ரூபாய் இருக்கும்’ என்ற எண்ணம் வந்தது. சரி, மூன்று ரூபாய்க்கு என்ன வழி என்று யோசித்தபோது, வெளியே போய் யோசிக்கலாமே என்று தோன்றியது. "மின்சாரம் பற்றிய தனி வகுப்பு இருக்கிறது. நான் கிளம்புகிறேன்" என்று ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு, வேங்கடராமன் எழுந்தான். "அப்படியா... கீழே பெட்டியில் ஐந்து ரூபாய் வைத்திருக்கிறேன். அதை எடுத்துக்கொண்டு போய் என் கல்லூரிக் கட்டணத்தைக் கட்டிவிடு" என்றான் அண்ணா. அண்ணாமலைக்குப் போக, காசுக்கு என்ன செய்வது என்று யோசித்தபோது, அண்ணன் மூலமாக இப்போது ஐந்து ரூபாய் கிடைத்திருக்கிறதே என்று சந்தோஷப்பட்டான் வேங்கடராமன். திண்டிவனம் போக மூன்று ரூபாய்தானே ரயில் செலவு. அது போதும் என்று நினைத்து, வீட்டைவிட்டு வெளியேற முடிவு செய்து, அண்ணனுக்குக் கடிதம் எழுதினான். இந்த உலகில் எழுதப்பட்ட பல கடிதங்களில் மிகச் சுருக்கமானதும், மிகச் சுவையானதுமான கடிதம் அது. சத்தியத்தில் நனைந்த வார்த்தைகள் அவை. மூன்று ரூபாய் மட்டும் எடுத்துக்கொண்டு, மீதி இரண்டு ரூபாயுடன் தமையன் நாகசுவாமிக்கு தம்பி வேங்கட ராமன் கடிதம் எழுதினான்.
"என் தகப்பனாரைத் தேடிக்கொண்டு, அவருடைய உத்தரவின்படி இவ்விடத்தை விட்டுக் கிளம்பிவிட்டேன். இது நல்ல காரியத்தில் பிரவேசித்திருக்கிறது. ஆகையால், இந்தக் காரியத்துக்கு ஒருவரும் விசனப்படவேண்டாம். இதைப் பார்ப்பதற்காகப் பணமும் செலவு செய்யவேண்டாம். உன் கட்டணத்தை இன்னும் செலுத்தவில்லை. ரூபாய் 2 இதோடு இருக்கிறது". இப்படிக்கு _ -என்று எழுதி, வெறும் கோடு மட்டும் கிழித்தான். பெயர் எழுதவில்லை. துண்டுக் காகிதத்தில், பென்சிலால் எழுதப்பட்ட கடிதம் அது. இந்தக் கடிதம் எவ்வாறோ மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, இப்போதும் ரமணாஸ்ரமத்தில் கவனமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மேலும் அவரை பற்றி முழுமயாக தெரிந்துகொள்ள பாலகுமாரன் அவர்கள் எழுதிய ' ஶ்ரீ ரமண maharishi' என்னும் புத்தகம் Amazon Kindle edition இல் கிடைக்கிறது. அந்த புத்தகத்தை நீங்களும் வாங்கி ரமணானுபவம் பெற்றிடுங்கள்.





