திங்கள், 3 ஜனவரி, 2022

‘ஹஸ்தாமலக ஸ்தோத்திரம்’ Translation by Sri Ramana Maharishi

 

ஸ்ரீசங்கர ஜெகத்குரு மேற்கு திக்கில் பயணம் செய்தபோது, ஸ்ரீவல்லி எனும் கிராமத்தில், பிரபாகர் எனும் அந்தணர், சங்கரரின் வரவை அறிந்து, தன் 13 வயது புத்திரனை அழைத்துக்கொண்டு போய், அவனை நமஸ்காரம் செய்ய வைத்து, தானும் நமஸ்கரித்து, சின்ன வயது முதல் பேச்சு வராதவனாக, எதிலும் நாட்டம் இல்லாதவனாக, விருப்பு - வெறுப்பு இல்லாதவனாக, எதிலும் பக்குவம் இல்லாதவனாக இருக்கிறவனுடைய நிலைமையைச் சொல்ல... ஸ்ரீசங்கரபகவத்பாதாள் அந்த பாலகனை அணைத்துக்கொண்டார். "குழந்தாய், நீ யார், யாருடைய மைந்தன் நீ, எங்கே சென்றுகொண்டு இருக்கிறாய், உன் பெயர் என்ன, நீ எங்கிருந்து வந்திருக்கிறாய்?" என்று மிகக் கூர்மையான பெரிய கேள்விகளைக் கேட்டார். அவரிடம் அந்த பாலகன், தன் நிலைமையைப் பற்றி வாய் திறந்து சொன்ன ஸ்லோகங்களே, ‘ஹஸ்தாமலக ஸ்தோத்திரம்’. வடமொழியில் அமைக்கப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார், பகவான் ஸ்ரீரமணர். நான் மனிதன் அல்ல. தேவனோ, யட்சனோ, அந்தணனோ, அரசனோ, மனிதனோ அல்ல; நான் பிரம்மசாரியும் அல்ல; கிரகஸ்தனும் அல்ல; பால பிராயனும் அல்ல; கிழவனுமல்ல; ஒட்டுமொத்த சந்நியாசியும் அல்ல; யார் ஒருவனும் நான் அல்லேன்; நான் சத்தியபோத ஞான சொரூபமானவன். இதுவல்ல, இதுவல்ல என்று சொல்லி, தான் ஆன்மா என்பதை மிக அழகாக, அந்த குழந்தை ஸ்லோகங்களாகப் பேசினான். ‘மேலே இருக்கிற சந்திரன், காற்றில் அசையும் அலைகளால் ஆடுவதைக் கண்டால், சந்திரன் ஆடுவது போல இருக்கும். ஆனால், சந்திரனா ஆடுகிறான்? இல்லை; இது கண் கொண்ட மயக்கம். இதே மயக்கம்தான் புத்திக்கு இருக்கிறது. புத்தி, எதிரே இருப்பவர் அந்நியர் என்று நினைத்துக்கொள்கிறது. புத்தி, எதிரே இருப்பவர் வேறு மதத்தவர், வேறு இனத்தவர், வேறு குலத்தவர் என்று நினைத்திருக்கிறது. உயர்வு என்றும், தாழ்வு என்றும் பிரித்துக்கொள்கிறது. இது புத்தியினுடைய ஆட்டம். மாயையான பார்வை. ஆனால், எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கிற அந்த விஷயம் பேதமற்றது. அதுதான் உன்னிலும் சகல இடத்திலும் பரவியிருக்கிறது. இதைத் தெரிந்துகொண்ட ஆன்மா நான்.’ பையன் சொன்ன ஸ்லோகங்களைப் பார்த்து, தந்தை பிரமித்து, புதல்வனை வெளிக்கொண்டு வந்த குருவை நோக்கிக் கைகூப்பி நிற்க, "இவனை மகனாக நீங்கள் அடைந்தது பாக்கியம். இவனால் உங்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை; இவன் என்னோடு இருக்கட்டும்" என்று அவனை அழைத்துக்கொண்டு போய்விட்டார். பகவத்பாதாளுடைய சீடர்கள், "குழந்தை ஏன் இப்படி இருந்தது? ஏன் இப்படி ஆயிற்று?" என்று கேட்க, "இந்தக் குழந்தையின் தாய் கங்கையில் குளிக்கப் போனபோது, ஒரு சாதுவிடம், இந்தக் குழந்தையைக் கொஞ்ச நேரம் பார்த்துக் கொள்ளும்படி, ஒப்படைத்துவிட்டுப் போனாள். அவர் பார்த்துக்கொண்டிருந்த போதே, அந்த குழந்தை கால் இடறி, கங்கையில் விழுந்து, மரணமடைந்துவிட்டது. குழந்தையை வாரி எடுத்த சாது, என்ன செய்வது, பெற்றவளுக்கு என்ன பதில் சொல்வது என்று கலங்கினார். பெற்றவள் அழக்கூடாது என்று தீர்மானித்து, தன் உடம்பைவிட்டு, இந்தக் குழந்தைக்குள் புகுந்துகொண்டார். அந்தச் சாதுவே, இந்தக் குழந்தை" என்று பகவத்பாதாள் சொன்னார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  PIXXEL: CAPTURING EARTH'S ESSENCE FROM THE SKY In today's world most of the mobile buyers used to buy mobile phones with best pixe...